Wednesday, October 8, 2014

முக்கிய பரிகார தலங்கள்
நாகதீர்த்தக் கோவில்: 

மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் நாகதீர்த்தக் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் 10 தலையுடன் கூடிய பஞ்சநாகர் சிலை இருக்கிறது. இதில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக எழுந்தருளி உள்ளனர். இது மிகவும் சிறப்பு. பவுர்ணமி நாளில் இக்கோவிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தக் கோவிலில் ராக்காயி அம்மன் சிலை உள்ளது. பிரசித்தி பெற்ற நாகமலை ஊற்றுத் தண்ணீர் இந்த அம்மன் சிலை அருகே வந்து விழுகிறது. 

கோடக நல்லூர் : 

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நாகப்பாம்பான கார்கோடகனுக்கு ஸ்ரீமந்நாராயணன் காட்சி கொடுத்ததால் இந்த திவ்ய தலம் கார்கோடக தலம் எனப்பட்டது. தற்போது கோடகநல்லூர் என அழைக்கப்படுகிறது. ராகுவினால் ஏற்படும் தோஷத்திற்கு முக்கியமாக நாகேஸ்வர தரிசனமும்,கேதுவினால் ஏற்படும் தோஷத்திற்கு காளஹஸ்தியும் முக்கியமான தலமாகும். இந்த இரு தலங்களில் செய்த பரிகாரத்தால் தீர்க்க முடியாத தோஷத்தையும் தீர்த்து வைக்கும் திவ்ய தலமே கார்கோடக தலமாகும். 

திருச்சிறுப்புலியூர் : 

மயிலாடுதுறை - காரைக்கால் சாலையில் செம்மாங்குடி அருகில் திருச்சிறுப்புலியூர் உள்ளது. பாம்புகளின் தலைவனான ஸ்ரீ ஆதிசேஷன், இத்தலபெருமாளை வணங்கி அனைத்து வரங்களையும் பெற்றாராம். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த பெருமாள் தனி சந்நிதி கொண்டு என்னை விட்டு பிரியாமல் என் அருகிலேயே இரு என ஆசீர்வதித்தார். இங்குள்ள ஆதிசேஷனை (ராகுவை)வணங்கினால் வழக்கில் வெற்றி, பூர்வீக சொத்து பிரச்சனை தீருதல், செல்வம் சேருதல் ஆகியன கிட்டும். 

பேரையூர் ஸ்ரீ நாகநாதர் : 

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாகநாதரை வணங்குங்கள். நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் இந்த ஈசனை வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. முறைப்படி இங்கு சென்று வணங்கினால் திருமணத்தடை நீங்கும். 

மணக்கால் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் : 

திருவாரூர்-கும்பகோணம் பாதையில் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ள தலம் மணக்கால். இங்குள்ள சிவலிங்கத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம். ஸ்ரீ சேஷ புரீஸ்வரரை வணங்கினால் அரசு காரியங்கள் யாவும் வெற்றி அடையும், நல்ல வேலை கிடைக்கும். 

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் :

தஞ்சைக்கு அருகில் உள்ள புன்னையநல்லூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மாரியம்மனை வணங்குங்கள். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் இங்கு பிரம்மாண்டமாக எழும்பி இருந்த புற்று மண்ணைக் குழைத்து ஸ்ரீசக்கரம் எழுதி அதன் மீது பிரதிஷ்டை செய்த அம்மனே இப்போது காட்சி தருகிறாள். இந்த அம்மனை வணங்கினால் பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் இவற்றால் ஏற்படும் அனைத்து உபாதைகளிலிருந்தும் விடுபடலாம். 

நாகூர் ஸ்ரீ நாகநாதர் : 

நாகர் ஊர் எனப்படும் நாகூரில் வீற்றிருக்கும் அருள்மிகு நாகவள்ளி உடனுறை ஸ்ரீநாகநாதரை வணங்குங்கள். ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள் பெற்ற திருத்தலமே நாகூர். இங்குள்ள ஈசனை வணங்கினால் பெரிய பதவிகள் கிடைக்கும். 

பாமணி ஸ்ரீ நாகநாதர் : 

மன்னார்குடிக்கு அருகில் பாம்பணி ஆற்றின் கரையில் உள்ள ஊர் பாமணி. பாம்பணி என்பதே பாமணி என்று மருவியதாக கூறுவர். இங்கு ஸ்ரீஅமிர்த நாயகி உடனுறை ஸ்ரீநாக நாதர் அருள் பாலிக்கிறார். இங்குள்ள இறைவனின் திருமேனி மீது பாம்பு உருவங்கள் காணப்படுகின்றன. இவரை வணங்கினால் உடலினுள்ள ஹார்மோன் பிரச்சினைகள் குறையும், மன இறுக்கம் விலகி நிம்மதி கிடைக்கும். 

பழுர் காசிவிஸ்வநாதர் : 

திருச்ச - கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் 9 நவக்கிரகங்களும் தம் தேவியருடன் காட்சி தருகின்றனர். இவ்வாலயத்தில் உள்ள நவக்கிரகங்களை வழிபட்டால் பிதுருதோஷம் நீங்குகிறது. 

பரமகுடி சக்கரத்தாழ்வார் : 

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடிக்கு அருகில் அனுமார் கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வார் ராகு தோஷத்தை தீர்த்து வைக்கிறார். 

நயினார் திருக்கோயில் : 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து 19 கி.மீ. தூரத்தில் நயினார் கோயில் உள்ளது. கோயில் பிரகாரத்தில் புற்றடி உள்ளது. இந்த புற்றில் நாகராஜர் வசிக்கிறார். இவருக்கு முட்டை, பால், பழம் படைக்கின்றனர். 

ராமேஸ்வரம் (பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி) : 

ராமேஸ்வரம் இத்தலத்திற்கு சென்று கடலில் நீராடிவிட்டு கோயிலில் உள்ள 21 தீர்த்தங்களிலும் நீராடி வந்தாலே பாவம் நீங்கி விட்டதாக கருதுகிறார்கள். குறிப்பாக ராகு, கேது தோஷமுள்ளவர்கள் இங்குள்ள நடராஜர் சன்னதியில் இருந்து பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும் விளக்கில் நெய்விட்டு வழிபட்டால் தோஷம் நீங்கி விடுகிறது. நடராஜர் சன்னதியை சுற்றிலும் நாகப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

இங்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கும்பம் வைத்து பூசை நடத்தி அர்ச்சகர்களால் தரப்படும் நாகர் சிலையை இந்த சன்னதியில் பிரதிஷ்டை செய்கின்றனர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தாங்கள் வைத்த நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்கின்றனர். சிலை அடையாளம் காண பெயரை பொரித்து வைக்கின்றனர். 

கொழுவூர் நாகநாதர் :

ராமநாதபுரம் மாவட்டம் கொழுவூர் நாகநாதர் திருக்கோவிலில் புற்றிலிருந்து ஏராளமாக மண் கொட்டுகிறது. இதனை உடனுக்குடன் சுத்தம் செய்து விடுகிறார்கள். புற்று உடைந்து போய் ஒழுங்கற்ற நிலையில் உள்ளது. 

வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் தரும் முட்டையை இரவு 7 மணிக்கு மேல் மொத்தமாக படைத்துவிட்டு நடையை அடைத்து விடுகிறார்கள். மறுநாள் நடை திறந்தவுடன் முட்டைகள் உடைந்து கிடக்கின்றன. இக்கோவிலில் 6 மணி முதல் திறந்திருக்கும் பக்தர்கள் எந்த நேரத்தில் வந்தாலும் நடை திறந்து இருக்கும் சர்பதோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் வந்து வழிபடுகிறார்கள். 

திருவாசி ஸ்ரீ நடராஜர் : 

திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் திருவாசி அமைந்துள்ளது. சர்ப்பதோஷம் உள்ளவர்கள் ராகு அல்லது கேதுவால் இங்கு பாதிக்கப்பட்டவர்கள் நரம்பு சம்மந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் பாம்பின் மீது நடனமாடும் நடராஜரை தரிசிக்க நற்பலன் கிட்டுகிறது. 

சாலிக்கிராமம் நாகாத்தம்மன் : 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் பிரசித்தி பெற்றவள் ஆவாள். கோவில் எதிரில் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் பூசி குங்குமமிட்டு வழிபட்டால் நாகதோஷத்தால் உண்டாகும் தீயபலன்கள் குறைந்து நற்பலன் பெறுவர். 

அம்மனை தரிசித்து உங்கள் குறைகளை கூறி அதை நிவர்த்தி செய்யுமாறு வேண்டிக் கொள்ள விரைவில் தீருகிறது. திருமணம் தாமதப்படுபவர்கள் அம்மனுக்கு வேண்டிக் கொண்டாலே போதும். உடனே திருமணத் தடை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற அருள் பாலிக்கிறாள்.

திருப்பாம்புரம் : 

கும்பகோணம் காரைக்கால் சாலையில் கொல்லு மாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்னும் கிராமத்திலிருந்து 3 கி.மீ. தொலைìல் அமைந்துள்ளது திருப்பாம்புரம் என்னும் திவ்ய தலம். ராகு, கேது தலங்களான ஸ்ரீ காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழ்பெரும் பள்ளம் ஆகிய தலங்களின் பெருமையை ஒரு சேர அமைந்தது இத்தலம். 

ராகு-கேதுவுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ராகுவும், கேதுவும் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றனர் என்பது தல வரலாறு. காலசர்ப்ப தோஷம் ராகு-கேது தசை நடப்பில உள்ளோர். களத்ரதோஷம், புத்ரதோஷம் உள்ளோர் இங்கு வந்து சாந்தி பரிகாரம் செய்து வருகின்றனர். 

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் மல்லிகை மணம், தாழம்பூ மணம் அடிக்கும் நேரங்களில் எங்கேனும் ஓரிடத்தில் பாம்பு தென்படுகிறது. தோஷ நிவர்த்திக்காக செவ்வாய்-வெள்ளி-ஞாயிறு கிழமைகள் நன்று. இந்நாள் வரை இவ்வூரில் அகத்தி பூப்பதில்லை. ஆல மர விழுதுகள் தரையை தொட்டதில்லை. பாம்பு தீண்டி இறந்தவர் இல்லை. 

திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் : 

ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் உண்டான சர்ச்சையில் ஆதிசேஷன் மேரு மலையை அழுத்தி பிடித்துக் கொள்ள வாயு பகவான் தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்ற பந்தயம் ஏற்பட்டது. இதன் படி வாயு பகவான் வேகமாக வீச மலையின் முகட்டுப் பகுதிகள் பறந்து சென்று பூமியன் பல இடங்களில் விழுந்தது.

ஆதி சேஷன் உடலில் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் கொட்டி மலை செந்நிறமானதாக கூறுகின்றனர். இம்மலைக்கு நாக கிரி, வாயு மலை என்னும் பெயர் உண்டு. 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோவில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாக தோஷம், ராகு தோஷம், காலசர்ப தோஷம், களத்ர தோஷம் அவற்றால் பாதிக்கப்பட்வர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். 

காஞ்சீபுரம் சித்ரகுப்தன் : 

சித்ரகுப்தன் கேதுவுக்கு அதிதேவதையாக விளங்குகிறார். இவருக்கு காஞ்சீபுரம் அருகே தனி ஆலயம் உள்ளது. இங்கு சென்று கொள்ளு 200 கிராம், உளுந்து 200 கிராம், சித்திரவண்ணத் துணி ஒன்றரை மீட்டர் வைத்து அர்ச்சனை செய்து துணியை ஆலயத்திலேயே அர்ப்பணித்துவிட்டு, உளுந்தையும், கொள்ளையும் பால்தரக்கூடிய பசுவுக்கு கொடுக்க வேண்டும். இந்தப் பரிகாரம் செய்வதால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 

காஞ்சீபுரம்-குமர கோட்டம் : 

காஞ்சீபுரத்தில் சங்கரமடத்தின் அருகில், ராஜவீதியில் குமரக் கோட்டம், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குதான் கந்தபுராணம் அரங்கேற்றப்பட்டது. இங்கு காணும் முருகனுக்கு 5 தலை நாகமும், வள்ளி, தெய்வானைக்கு 3 தலை நாகமும் குடை பிடிக்கிறது. முருகனை கல்யாண சுந்தரர் என்று அழைக்கின்றனர். 

தமிழ்நாட்டில் இது போன்று நாகம் குடை பிடிக்கும் விக்ரகம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த முருகனை நாகம் வழிபடுவதால், நாக சுப்பிரமணியம் என்று பெயர் பெறுகிறார். நாக சுப்பிரமணியரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும் பரிகார தலமாக அமைந்துள்ளது* 

No comments:

Post a Comment